Thursday, July 17, 2014

''கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்''

ஸ்ரீ :
ஸ்ரீமதே ராமானுஜாய நாம:
ஸ்ரீமத் வரவர முனயே நாம:
ச்ரிய: பதியான ஸர்வேஸ்வரனுடைய நிர்ஹேதுக கிருபையால் ஞான பக்தி வைராக்யங்களைப் பெற்றவர்கள் ஆழ்வார்கள். அவ் வாழ்வார்கள் பதின்மர் என்பதும், அவர்கள் அவதார கிரமம் இன்னது என்பதும் ஸ்வாமி மணவாள மாமுனிகளால்  உபதேச ரத்தின மாலையில்
பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ்மழிசை 
அய்யன், அருள்மாறன், சேரலர்கோன், துய்யபட்ட 
நாதன், அன்பர்தாள்தூளி, நற்பாணன், நன்கலியன் 
ஈதிவர் தோற்றத்தடைவாம் இங்கு.
என்று அருளிச் செய்யப்பட்டது.. 
ஸம்ஸாரிகள் அனர்த்தத்தைக் கண்டு ஆற்றமாட்டாத பரம க்ருபாளுவான பகவான் தன்னைக் கிட்டி அவர்கள் கரைமரம் சேர பலக்ருஷிகளைசச் செய்து பார்த்து பயன்படாமல் போக, முடிவில் இங்குள்ள சில அதிகாரிகளையே ஆழ்வார்களாகத் திருத்தி  அவர்கள் மூலமாக லோகத்தாரையும்  திருத்த திருவுள்ளம் பற்றுகிறான். அப்படி அவனால் திருத்தப் பட்டு அவனுடைய சௌலப்ய, சௌசீல்ய, சௌந்தர்யாதி கல்யாண குணங்களில் ஆழங்கால் பட்டவர்களாய், பக்திப்ரவாஹம் உள்ளடங்காமல் பாசுரங்கள் திருவாய் மலர்ந்தருள, அவையே திவ்யப்ரபந்தங்கள் என வழங்கப் படுகின்றன.
இதையே  மாமுனிகள் 
''அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள் 
இந்த உலகிருள் நீங்க வந்துதித்த''
என்று அருளிச் செய்தார்.
உப்பு ஜலமான கடல் நீரை மேகம் பருகி மழையாகப்  பொழியும் போது, அது பான யோக்யமாய் மாறுகிறதுபோல மிகவும் கடினமான பாஷையில் வேதாந்தங்களில் சொல்லப் பட்ட அர்த்தங்களை தங்கள் பாசுரங்களால் ஸர்வர்க்கும் ஸர்வதா உபஜீவ்ய மாக்கினவர்கள் ஆழ்வார்கள்.
இவ்வர்தத்தை அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் ஆசார்ய ஹ்ருதயத்தில்  ''மேகம் பருகின சமுத்திராம்பு போலே நூற்கடல் சொல் இவர் வாயனவாய் திருந்தினவாறே ஸர்வதா ஸர்வோப ஜீவ்யமாமே'' என்று காட்டியுள்ளார்.
 
தமிழ் பாஷையில் அவர்கள் அருளிச்செய்த பிரபந்தங்கள் வேதாந்தங்களில் மொழியப் பட்ட தத்வஹித புருஷாரத் தங்களை தழுவியே அவதரித்தன என்பதும் இத்தால் தேறுகிறது.
இப்படியான ஆழ்வார்களில், ஐந்தாவதாக அவதரித்தவர் நம்மாழ்வார். மற்றவர்களும் அழ்வார்களே ஆனாலும், நம்மாழ்வார் ஒருவரையே ''ஆழ்வார்'' என்கிற பதம் குறிக்கும். காரணம் இனி  மேலே விளக்கப் படுகின்றன.
''வேதவேத்யன்'' நியாயத்தாலே பிரமாணம், பிரமேயம் இரண்டுக்கும் ஐந்தைந்து நிலைகள் பேசப் படுகின்றன. பகவானுடைய பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை போலே, பிரமாண பூதமான வேதத்துக்கும் ஐந்து நிலைகள். அவைதாம் : வேதம், பாஞ்சராத்ரம், ஸ்மிருதிகள், இதிகாச புராணங்கள், திவ்யப் பிரபந்தங்கள் என்கிற ஐந்து நிலைகள் ஆகும். 
வேதத்துக்கு பரத்வத்திலும், பாஞ்சராத்ரதுக்கு வியூகத்திலும், ஹ்ருதி ஸநிவிஷ்டனான அந்தர்யாமித்வத்தில் ஸ்மிருதிகளுக்கும், விபவத்தில் இதிகாச புராணங்களுக்கும், அர்ச்சையில் நோக்கு திவ்ய பிரபந்தங்களுக்குமாம். ஆக, ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கு அர்ச்சாவதாரமே தாத்பர்யம் என்பது நம்பூவாசார்ய சன்மதம். 
ஆனால் நம்மாழ்வார் விஷயத்திலோ என்னில், அர்ச்சாவதார அனுபவத்திலும் விபவாவதாரமான கண்ணனிடத்திலேயே வியாமோகம். ''க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்'' என்ற பெயர் இத்தாலேயே இவருக்கு ஏற்பட்டது எனலாம். பராசர மகரிஷியும் இவரும் விபவத்தில் ஊன்றி இருப்பர்கள்  என்பது பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகம். 
அர்ச்சாவதார சௌலப்யத்தை உபதேசிக்க வந்த ஆழ்வார்  தன்னை விபவத்திலே மூட்டுவதை  ''செய்ய தாமரைக் கண்ணனாய்...'''(திருவாய்மொழி 3-6-1) பதிகத்திலே நிரூபித்தாராய்ப் பார்கிறோம். கிருஷ்ணவதாரத்தைக் காட்டிலும், அர்ச்சாவதாரத்துக்கு நீர்மை பிராசுர்யமான போதிலும் ''எத்திறம்'' என்று ஆறு மாதம் மோகித்தது கிருஷ்ணாவதாரத்திலே அன்றோ?
"கடியன், கொடியன், நெடியமால் உலகம் கொண்ட 
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும் 
கொடிய என்நெஞ்சு அவனென்றே கிடக்கும் எல்லே " (திருவாய்மொழி 5-3-5)
என்கிற பாசுரம் கொண்டும் இவ்வர்த்தம் ஊர்ஜிதப்படும்.  
கண்ணன் பரம துஷ்டனானாலும் அந்த தோஷமே உடலாய் என்நெஞ்சம் அவனே தஞ்சம் என்று கிடக்கிறது என்கிற ஆழ்வாருடைய கிருஷ்ண பக்தி ஸ்வரூப ப்ரயுக்தமே அன்றி, குணகிருத மன்று. 
சீதா பிராட்டி, அநஸூயை இடத்தில் அறிவித்தாப் போலே அவன் குணஹீனனான போதன்றோ அவனிடத்தி லுண்டான ஸ்வரூபக்ருத தாஸ்யத்தை நிரூபிக்கலாவது. 
மேலும் நாயிகா பாவத்தை அடைந்த ஆழ்வார், ஸ்பாவ சித்தமான வெண்மை நிறம் கொண்ட நாரையைக்  குறித்து, அந்நாரையும் கண்ணனை விட்டுப் பிரிந்த வருத்தத்தால் உடம்பு வெளுத்ததாக நினைத்துக் கதறுகிறார். இவருக்குண்டான விலக்ஷண பக்தியே இதற்கு காரணம். 
இந்த விஷயத்தையே அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும், ''அச்சேத்யோயம், அதாஹ்யோயம், அக்லேத்ய, அசோஷ்ய ஏவச''  என்னுமது ஈரும் , வேம், ஈரியாய் உலர்த்த எண்ணப் பட, காற்றும், கழியும் கட்டியழக் கொண்ட பெருங்காதலுக்கு பத்திமை நூல் வர்ம்பில்லையே''  என்றருளிச் செய்கிறார். 
 
இப்படியான  சாஸ்திர மர்யாதீத ஆழ்வாருடைய காதல் கண்ணனிடத்தில் பெருங்காதலாய், விலக்ஷண பக்தியாய், ''கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்'' என்றே  நிரூபிக்க ஹேதுவாகின்றன.

No comments:

Post a Comment